மெக்சிகோ: பசிபிக் பெருங்கடலில் உருவான தீவிரப் புயல் ‘சைமன்’ மெக்சிகோவை நெருங்கி வருவதால், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் உருவான இந்தத் தீவிரப் புயல் மெக்சிகோவை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கடற்கரையை ஒட்டியே நகர்ந்து கரையைக் கடக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடலில் இருந்து புயல் நெருங்கி வருவதால், கடற்கரையை ஒட்டியுள்ள அகாபுல்கோ, மான்சானில்லோ உள்ளிட்ட துறைமுக நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்கள் மற்றும் கடைத்தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காபோ கொரியண்டெஸ், லாசாரோ கார்டெனாஸ் உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், கடலில் ராட்சத அலைகளும் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசுவதுடன், மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவேர்ட்டோ வல்லார்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள் மற்றும் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீவிரமடைந்து வரும் புயலால் மெக்சிகோவின் கடலோரப் பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிலவி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
