Skip to content
Home » தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதில் மனு தாக்கல் செய்தது. அதில் ஜூன் 30ம் தேதி தான் தர இயலும் என்று கூறியது.இதை எதிர்த்து பலர் கோர்ட்  வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் மார்ச் 14ம் தேதி   தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி  தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது.

ஸ்டேட் வங்கி அளித்துள்ள தகவல்களின்படி கிராசிம் இன்டஸ்ட்ரீஸ், மேகா என்ஜினீயரிங், பிரமல் என்டர்பிரைசஸ், டோரன்ட் பவர், பாரதி ஏர்டெல், டி.எல்.எப். டெவலப்பர்ஸ், வேதாந்தா லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், லட்சுமி மிட்டல், பி.வி.ஆர்., ஈடில்வெயிஸ், கெவன்டர், சுலா ஒயின், வேல்ஸ்பன், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளன. பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பாரத ராஷ்டிர சமிதி, சிவசசேனா, தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி போன்ற கட்சிகள் அவற்றை பணமாக்கி உள்ளன.

தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் தனிநபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே நேற்று பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மற்றபடி தேர்தல் பத்திர பிரத்யேக எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.  பிரத்யேக எண்களை தரும்படி  வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள் ஸ்டேட் வங்கியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்தனர்.  அத்துடன்  வரும் 18ம் தேதிக்குள் பிரத்யேக எண்களுடன்   முழு விவரங்களையும் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!