Skip to content
Home » புதினை விமர்சித்த ரஷிய கோடீஸ்வரர் ஒடிசாவில் மர்ம சாவு

புதினை விமர்சித்த ரஷிய கோடீஸ்வரர் ஒடிசாவில் மர்ம சாவு

ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளரான பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் வந்துள்ளார். ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், ஓட்டல் 3-வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி ஆன்டோவ் மரண வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா கூறும்போது, பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 25-ந்தேதி) மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை நேற்று தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் கூறும்போது, எங்களது சக உறுப்பினர், ஒரு வெற்றிகர தொழில் முனைவோரான மற்றும் ஏழைகளுக்கு உதவும் தனவந்தரான பாவெல் ஆன்டோவ் மரணம் அடைந்துள்ளார். அவருடைய உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என ஆன்டோவ் மறைவை ரஷிய சட்டசபை சபாநாயகர் விளாடிமிர் கிசெலியோவ் உறுதி செய்துள்ளார். ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் (வயது 61) என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்த சில நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்து உள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை அடுத்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!