Skip to content
Home » உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

தமிழக அரசின் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த ‘தமிழ் புதல்வன்’ எனும் மாபெரும் திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ – மாணவிகளுக்கான கல்லூரி கனவு-2024 மாவட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

. நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அளித்த பேட்டி: தேசிய அளவில் தமிழகத்தில்தான் உயர் கல்வி படிப்பவர்களின் சதவீதம் அதிகம். ஆனால், 12ம் வகுப்பு படிக்கும் அனைவரும் உயர் கல்வியில் கட்டாயம் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 12ம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வியில் சேராமல் இருப்பவர்களை கணக்கெடுத்து, அவர்களை உயர் கல்வி படிக்க வைக்க ஏற்பாடு செய்ய ஒரு குழுவை ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு பள்ளி, பகுதிகள், பஞ்சாயத்துகள் போன்ற அனைத்து பகுதிகளிலும் இந்த குழுவினர், மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பெண்களை பொறுத்தவரை 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு ‘புதுமை பெண்’ திட்டம் இருக்கிறது. இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 தமிழக அரசு மூலமாக கொடுக்கிறோம். அதேமாதிரி மாணவர்களுக்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இந்த கல்வி ஆண்டு (ஜூலை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவ – மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!