Skip to content
Home » பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு“ என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு நாள் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சியினை பெரம்பலூரில்  மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்ற இந்த பேரணியில் மாணவ மாணவிகள் தமிழ் மொழி குறித்தும், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்தும் பறைசாற்றும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த புகைப்படக் கண்காட்சியில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட வரலாறு, அதற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை விளக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
இன்று முதல் 23.7.2023 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியினை பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் வருகை தந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் சு.ஹரிப்பிரியா என்ற மாணவிக்கு ரூ.10,000க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம் பிடித்த வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் செ. பார்கவி என்ற மாணவிக்கு ரூ.7,000க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், மூன்றாமிடம் பிடித்த கவுல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மா.அஞ்சலி என்ற மாணவிக்கு ரூ.5,000க்கான காசோலை மற்றும் சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார்.

கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த  கீர்த்தனாஸ்ரீ  , சி.நசினா, அக்ஷயா  ஆகியோருக்கும் கலெக்டர் பரிசளித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கணணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீனா அண்ணாதுரை(பெரம்பலூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!