Skip to content
Home » காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.  காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கர்நாடகத்தை சேர்ந்த கே.எல்.ராகுலும் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கே.எல்.ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- ‘காவிரி எப்போதும் நமதே (கர்நாடகம்), காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் அந்த தண்ணீரை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்னடர்கள் சட்ட போராட்டத்துடன் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என பதிவிட்டுள்ளார். கே.எல்.ராகுலின் இந்த பதிவுக்கு கன்னடர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் ராகுலுக்கு  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து காவிரி டெல்டா விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் தேவையில்லை.  அதை விட்டு ராகுல் அரசியல் செய்ய நினைத்தால் அவர் தமிழ் நாட்டுக்குள் வந்து  விளையாட  முடியாத  நிலை ஏற்படும்.  காவிரி கர்நாடகத்தின் சொத்து என்று கூறும் ராகுலே,  மின்சாரம் தமிழ்நாட்டின் சொத்து, அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்ற கூற நீ தயாரா,?  கர்நாடfத்தில் வெள்ளம் வந்து விட்டால், உங்களின் சொத்துக்களை, உடமைகளை காப்பாற்ற அவ்வளவு தண்ணீரையும் இங்கே திறந்து விடுகிறீர்கள். அப்போது, தமிழன்   சொத்து சுகங்களை இழக்க வேண்டுமா?

தமிழகத்திற்கு எதிராக அரசியல் செய்யும் ராகுலை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து  ஜெய்ஷா தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் கிரிக்கெட்டை புறக்கணிக்கும் நிலையை டெல்டா விவசாயிகளும், தமிழக மக்களும் ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!