Skip to content
Home » தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

  • by Senthil

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி  வீதியுலா வந்தார்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள்  முழங்க  தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம் தொடங்கிய போதே அலங்காரப் பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியதால், புறப்படுவதில் கால் மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தேர் கொங்கணேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் மீண்டும் சிக்கியது. தொடர்ந்து மின் கம்பி அகற்றப்பட்ட பின்னர் தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

மீண்டும் 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.இப்படி அடிக்கடி மின் கம்பங்களில் சிக்கி தேர் நின்றது., இதையடுத்து அலங்காரப் பந்தலின் அகலம் குறைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால் தேரோட்டம் தாமதமானது.

தெரோட்டத்தின் போது மின் கம்பத்தில் கட்டிய தேர் அலங்காரத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் மீது  மின் கம்பத்தில் இருந்த பீங்கான் மின் சாதனப் பொருள் மற்றும் ராடு கழன்று விழுந்தது. இதில் இருவரும்  காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!