Skip to content
Home » சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை அன்பழகன் வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இதுதவிர டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பின்பு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பல்வேறு துறைகளில் 1.6.2009-க்கு பிறகு ஆசிரியர் மற்றும் பிற பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சம்பள முரண்பாடு, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.

இதை ஆய்வுசெய்ய நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 மாதங்களில் அறிக்கை தயாரித்து அதன் முடிவை முதல்வரிடம் சமர்பிக்கும். ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிநியமனம் சார்ந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இதுதவிர அரசுப் பள்ளிகளில் தற்போது 10,359 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஊதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்க முடிவாகியுள்ளது. கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையான மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போதும் 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. எண்ணும், எழுத்தும் பயிற்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, தங்கள் போராட்டத்தை தொடர்வதாக டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!