Skip to content
Home » ”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

  • by Senthil

முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள் சுப்ரமணியை(பசுபதி)அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் இருக்கும் கிடாரிபட்டியில் இருந்து ஒரு வித்தியாசமான புகார் வருகிறது. அந்த வழக்கை சுப்ரமணி விசாரிக்க வேண்டியிருக்கிறது. போலீசாரை எதிரியாக பார்க்கும் மக்கள் வசிக்கும் கிராமம் கிடாரிப்பட்டி.

அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தங்கபொண்ணுக்கு(ரோகிணி) 4 மகள்கள், ஒரு மகன். அந்த மூதாட்டி திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விடுகிறார். பேராசை பிடித்த மகள்கள், குடிகார மகனின் தொல்லை தாங்க முடியாமல் தங்கபொண்ணு கிராமத்தை விட்டுச் சென்றதை கண்டுபிடிக்கிறார் சுப்ரமணி.

சுப்ரமணி அந்த மூதாட்டியை தேடிக் கண்டுபிடித்த பிறகு உடல்நல பிரச்சனையால் அவர் இறந்துவிடுகிறார். தங்கபொண்ணு இறந்துவிட்டாரே என அவருக்காக கவலைப்படாமல் அவர் காதில் இருக்கும் தண்டட்டி மீது தான் உறவினர்களின் கண்கள் செல்கிறது. இந்நிலையில் இறந்த மூதாட்டியின் காதில் இருந்த தண்டட்டி மாயமாகிறது. இந்த பிரச்சனையை எல்லாம் தீர்த்து
வைத்து தங்க பொண்ணுவின் இறுதிச் சடங்கு அமைதியாக நடக்க வழிவகை செய்வாரா சுப்ரமணி?

புதுமுக இயக்குநரான ராம் சங்கையா தான் உருவாக்கிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அவரின் உலகம் புரியத் துவங்கியதுமே சில கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நாம் பயணிக்கிறோம். அவர்களின் காமெடியில் புதுமை இருக்கிறது.

இரண்டாம் பாதி முழுவதும் தண்டட்டியை கண்டுபிடிப்பதை பற்றியே செல்கிறது. அந்த தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் கதையை இயக்குநர் முன்பே கூறிவிட்டதால் நம்மையும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நிலைமை சீரியஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காமெடி ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இல்லை. இயக்குநர் வைத்த டுவிஸ்ட் தேவையில்லாதது. குடிகாரராக விவேக் பிரசன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கபொண்ணுவின் மகள்களாக நடித்த பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். கான்ஸ்டபிளாக சிறப்பாக நடித்திருக்கிறார் பசுபதி. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு தேவையான ஒன்று அன்பு அதை கொடுத்தால் போதும். மொத்தத்தில் காசுக்காக அவர்களை தேடாதீர்கள் அன்பால் தேடுங்கள் என்பதை படம் எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!