Skip to content
Home » முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்  கடந்த 12-ந் தேதி  தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்தநிலையில் சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட இருக்கிறார்.

சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பட் ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு இலச்சினை நேற்று வெளியிடப்பட்டது. “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற கருப்பொருள், இதில் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட்டுக்காக இலச்சினை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இன்றைய பட்ஜெட் மாபெரும் தமிழ்க்கனவு என்ற  தலைப்பின் கீழ் வெளியாகும் என   எதிர்பாா்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!