Skip to content
Home » தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

  • by Senthil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.. ஜீவகுமார்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நிலத்தடி நீர் அவதாரம் குறைவாக உள்ள பகுதியாகும். இதனால் இங்கு நடப்பாண்டில் சாகுபடி பணிகள் நடக்கவில்லை. எனவே செங்கிப்பட்டி பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். பின்பட்ட சம்பா 55 சதவீதம் நடந்துள்ளது. ஆனால் மற்ற பகுதிகளை விட தஞ்சை பகுதியில் மழை குறைவாக பெய்துள்ளது. இங்கு ஆழ்குழாய் பாசனத்தை விவசாயிகள் நம்பியுள்ளனர். எனவே மும்முனை மின்சாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் தனியார் வியாபாரிகள் குறுவை நெல்லை அதிகம் கொள்முதல் செய்தனர். சம்பா அறுவடையின் போது ஏகபோகமாக அரசே நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

பாசனதாரர் சங்கத் தலைவர் ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டில் உள்ள ஆண்டாள் ஏரி சுமார் 250 ஏக்கர் கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி சுமார் 69 ஏக்கரில் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக 1000 ஏக்கர் நிலத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் இன்னும் கூடுதலாக விவசாயிகள் பயன்பெறுவர்.

குருங்குளம் கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: தமிழக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மின்கம்பம் நடப்பட்டு மின் கம்பிகள் இழுக்காமல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மின்கம்பி இழுத்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அரவைப் பருவம் வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்க உள்ள நிலையில் ஆலையில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனை உடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். வெட்டு கூலியை அரசே ஏற்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் கடந்த காலங்களில் வழங்கியது போல் உழவு மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்: வரும் 2024 பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திற்கான வேளாண் உற்பத்தி பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து மட்டுமே தவறாமல் வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்ளிடத்தை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கை மிக நியாயமானது தான். நீர்வளத்துறை, கனிம வளம்,. சுரங்கத்துறை, வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் துறைகளின் அலுவலர்கள் மீதும் அமலாக்க துறையின் நடவடிக்கை வேண்டும்.

கொள்ளிடம் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். பிஎம். கிஷான் நிதி வழங்கலில் கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம்… தற்போது நடைபெறும் சம்பா சாகுபடிக்கு வேண்டிய அனைத்து உரங்களையும் அனைத்து கூட்டுறவு சங்கத்திலும் இருப்பில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி இன்சூரன்ஸ் நிறுவனங்களை தமிழக அரசே நடத்தவேண்டும். பேராவூரணி வட்டம் மறவன் வயல் மறவன் பாசன குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ராவுத்தன் பாசனகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேராவூரணி, பட்டுகோட்டை, ஒரத்தநாடு தாலுக்காக்களில் தமிழகத்திலே அதிக அளவில் பாசன குளங்கள் ஏரிகள் உள்ளது. வருவாய் துறை அனைத்து குளங்களையும், ஏரிகளையும் அளவீடு செய்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் மாடுகள் படுத்துக் கொண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் ஓடிவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த மாடுகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!