Skip to content
Home » தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

  • by Senthil

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை கார்த்திகை தீப திருநாள் என்பதால் வீட்டின் வெளியே விளக்கு ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார் இந்திராணி.

அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியைப் பிரித்துக் கொண்டு மங்கி குல்லா முகமூடி உடன் வேட்டி அணிந்த மூன்று மர்ம நபர்கள் வருவதை பார்த்த இந்திராணியும் அவரது மகள்களும் “திருடன்… திருடன்…” என கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து, “சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்” எனக் கூறி அந்தப் பெண்களை மிரட்டி இருக்கிறார்கள்.

பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்கச் செயின்களைப் பறித்தனர். மொத்தம் 7 பவுன் தங்க செயின்களைப் பறித்துக்கொண்டு மூவரும் அங்கிருந்து பறந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மட்டும் பக்கத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இந்திராணி மற்றும் அவரது மகள்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த பெண்மணியும் அவரது தாயும் வீட்டிற்குள் ஓடியுள்ளனர். ஆனால் கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு போய் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.

அப்போது அங்கிருந்த மூதாட்டி அந்தக் கொள்ளையனை பிடித்து வெளியே தள்ளி கதவை பூட்டி உள்ளார். இதனால் அவர்களது நகைகள் தப்பிவிட்டன. இதனையடுத்து அங்கிருந்து வெளியே வந்த அந்தக் கொள்ளையன் கைரேகை தடம் இருக்கக்கூடாது என்று தனது மங்கி குல்லா முகமூடியை அவிழ்த்து கதவில் இருந்த கைரேகையை துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மங்கி குல்லா கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மங்கி குல்லா அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து வரும் சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!