Skip to content
Home » தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் திருக்கோயில் தேரோட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ள வீதிகள், தேர் கட்டுமானம், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்த மாவட்ட  கலெக்டர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது…. தஞ்சாவூரில் சிறப்பு மிக்க பெரிய கோயில் தேரோட்டம் வரும் மே 1 ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை

வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர் திருவிழாவில் பக்தர்களும், பொதுமக்களும் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தேர் நிலைகள்: தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும், தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் நிலைக்கு மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும்.
இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும்.
மேலும், மேல் ராஜவீதியில், சந்துமாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோயில், ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில்களிலும், கீழராஜ வீதியில் முத்துமாரியம்மன் கோயில், விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில்களிலும், தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களின் எதிரே பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைக்கவும் திருத்தேர் நிறுத்தப்படும்.

தேர் எடை:
தற்போதுள்ள தேர் 2015ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தேரோட்டம் கரோனா காரணமாக 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெறவில்லை. தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக இருக்கும். இந்த தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையில் இருக்கும் என்றார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!