Skip to content
Home » சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

தஞ்சாவூர் காவிரி டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டனின் 220- வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 15), அவர் கட்டிய கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன், 15.5.1803 -ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு 1829- ம் ஆண்டில் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்து, கரிகாலச்சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, அங்கு தண்ணீரை பிரித்து வழங்கும் தொழில்நுட்பத்தை கொண்டு அணையை பலப்படுத்தினார்.
கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த 1835-36 ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே முக்கொம்பில் மேலணையும், அணைக்கரையில் கீழணையும் கட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்ப் பாசன கட்டமைப்புகளையும் கட்டியேழுப்பி பாசன நீரை முறைப்படுத்தி காவிரி டெல்டாவினை வளமாக்கினார்.
காவிரி டெல்டா பாசனப் பகுதியை மேம்படுத்திய பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் 220 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமையில் விவசாயிகள் கல்லணையில் உள்ள சர் ஆர்தர் காட்டனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி பொறுப்பாளர் ம.கணபதி சுந்தரம் தலைமையில் அக்கட்சியினர் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணகி, விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர் டி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்காட்டுப்பள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், தோகூர் கிளைச் செயலாளர் கே.சத்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசுக்கு கோரிக்கை:
ஆந்திராவில் கோதாவரி நதியின் தவ்லேஸ்வரத்தில் ஆர்தர் காட்டன் கட்டிய அணையால் தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் தற்போது முப்போகம் விளைகிறது. அதற்கு நன்றிக் கடனாக அங்கு கிராமந்தோறும் ஆர்தர் காட்டன் சிலையை நிறுவியுள்ளனர். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ராஜமுந்திரியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பணிகளுக்கு பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் ஆற்றியுள்ள பணிகளை போற்றும் வகையில் இவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்.ஆர்தர் காட்டன் பெரும்பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்லனையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டனுக்கு சிலையும் அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என நிகழ்ச்சியில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!