தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் மேயர் பேசும் போது :-
தஞ்சை மாநகராட்சியில் 90 சதவீதம் சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு சாலைப் பணியில் 100 சதவீதம் எட்டி விடுவோம் என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில்
இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-
கவுன்சிலர் கண்ணுகினியாள்:
பூக்காரத்தெரு ரெயில்வே கீழ் பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சாலைப் பணிகளை முறையாக செய்ய வேண்டும். பூக்கார தெரு அய்யனார் கோவில் தெரு பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதற்கு மேயர், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடுமா ? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான் என கூறினர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ
.2000 கிடைக்கும் என்றார்.
இதற்குப் பதிலளித்து அ.தி.மு.க ஆட்சிக்கு வராது என தி.மு.க கவுன்சிலர்கள் கூறினர்.
இதனால் தி.மு.க- அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் , சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
இதையடுத்து மேயர் சண் ராமநாதன் கூட்டம் இத்துடன் முடிவடைகிறது எனக் கூறி சென்றார்.
