நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக தலைமுறை தலைமுறையாக கைகளினால் சேலைகள் போன்றவற்றை நெசவு செய்து வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சேரன்மகாதேவி ஒன்றிய த.வெ.க. நிர்வாகி சிவா என்பவர் இந்த நெசவாளர் குடியிருக்கும் இதே பகுதியில் கடந்த ஒர் ஆண்டுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அசோக்குமார் என்ற நெசவாளர் தனது நெசவுத் தறியில் வேலையை தொடங்குவதற்காக பாவு என்ற முறையில் நூலை வெயிலில் காய வைத்துள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தகராறில் ஈடுபட்ட சம்பவம் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெசவுத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் பாவு நூல்களைச் சாலையில் நீட்டி, கஞ்சி போட்டு காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக காரில் வந்த தவெக நிர்வாகி, நெசவாளர்கள் கஷ்டப்பட்டு காயவைத்திருந்த நூல் பாவின் மீது தனது காரை ஏற்றியுள்ளார். இதனை நெசவாளர்கள் தட்டிக்கேட்டபோது, அந்த நிர்வாகி நெசவாளர்களிடம் மிரட்டும் தொனியில் வம்புச்சண்ட இழுத்து, அடாவடியாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தவெக தலைமையும் மக்கள் பிரதிநிதிகளும் “ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு உதவுங்கள்” என அறிவுறுத்தி வரும் வேளையில், கட்சியின் நிர்வாகி ஒருவர் அடித்தட்டு உழைப்பாளிகளான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைச் சேதப்படுத்தி, அடாவடியில் ஈடுபட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
