செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவரம் – விளாங்காடுப்பாக்கம் செல்லும் சாலை, செட்டிமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேநீர் கடை இயங்கி வருகிறது. கேரளா மாநிலத்தை சேர்ந்த சல்மான் (35) என்பவர், தேநீர் கடையை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று கடைக்குள் வந்து சிலர் தேநீர் மற்றும் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடை ஊழியர்கள் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால், அங்கிருந்த சல்மானை கடைக்கு வெளியே வரவழைத்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சல்மானை சரமாரியாக தாக்கி, காலால் எட்டி உதைத்துள்ளனர். இதில் நிலைகுலைந்த சல்மான் செய்வதறியாது திகைத்து நின்றார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள், கடை நிர்வாகி சல்மானை மிரட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த, சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த சல்மான், தன்னை தாக்கிய தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி இணை அமைப்பாளர் விஷ்ணு உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
