காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காவிரி கர்நாடகாவிற்கு மட்டுமே சொந்தமானது அல்ல; காவிரி தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இந்த விவகாரம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் திறக்கப்பட வேண்டும். அது தான் சட்டம், அதனால் தான் நீதிமன்றம் ஒரு ஆணையத்தை அமைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் என்பது குறித்து அந்த ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எனவே கர்நாடகாவால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மாட்டோம் என மறுக்க முடியாது. ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேசச் சட்டம் வலியுறுத்துகிறது என குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குறித்து பேசுகையில், “நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் இது அறிமுகப்படுத்தப்பட்ட போது திமுக அதை வலுவாக எதிர்த்தது, எங்களின் எதிர்ப்பால் தான் அதை ஒன்றிய அரசால் அப்போது நிறைவேற்ற முடியவில்லை. எங்களுக்குத் தொகுதி மறுவரையறை வேண்டாம்.
தென்னிந்திய மாநிலங்களின் இடங்கள் குறைக்கப்பட்டு அவை வட மாநிலங்களுக்குச் செல்வதையும், அதனால் வட மாநிலங்கள் பயனடையும் அதே வேளையில் தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் உரிமைகளை இழப்பதையும் நாங்கள் விரும்பவில்லை.
இந்த மசோதாவால் பாஜக-வும் பயனடையும். பயன் கிடைக்கும் என்பதால் தான் அவர்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஏனெனில் தற்போதைய நிலையில் மக்கள் பாஜக-விற்கு எதிராக உள்ளனர். ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, எனவே மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
