உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி ஒரு கி.மீ சுற்றளவில் கட்டுமானங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த வரவேற்கத்தக்கத் தீர்ப்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராடி வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அதில் கட்டுமானங்களை மேற்கொள்ள கடந்த ஆட்சிகளில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் சதுப்பு நில எல்லைக்குள்ளாகவே தனியார் கட்டுமான நிறுவனம் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதை அடுத்து, அது குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி ஆணையிட்டது. அந்தத் தடையை அகற்ற வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் கட்டுமானங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசே தயாராக இருந்தது. அதற்கு வசதியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த முடிவை தாங்களும் ஏற்றுக் கொள்வதாக தனியார் கட்டுமான நிறுவனங்களும் மகிழ்ச்சியுடன் உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தன. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதுகாப்புக்கு எதிரான இந்த மோசமான சமரசத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும். இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி எதை வலியுறுத்தி வந்ததோ, அதுவே நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பும் நிலத்தை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளேன்; 3 முறை அறிக்கை வெளியிட்டுள்ளேன். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதை ஆக்கிரமிக்க வசதியாக கட்டப்படும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
புவியியல் காண்
அதேபோல், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப் பேரவைக் கட்சித் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணி அவர்களும் பள்ளிக்கரணையை நேரில் பார்வையிட்டு, இதே கருத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதிய சௌமியா அன்புமணி அவர்கள், தமிழ்நாடு மாநில ஈரநிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் இராகேஷ்குமார் ஜகானியாவை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜார் பகுதியில் கையெழுத்து இயக்கமும் நடத்தி தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
புவியியல் காண்
ஆனால், தமிழ்நாடு அரசோ கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்யாதது, தாக்கப் பகுதியை கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக குறைத்தது என தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகவே நான் பார்க்கிறேன். இவ்வளவு துரோகங்களையும் மீறி, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பாராட்டத்தக்கது ஆகும். இது பாமகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த பயனாகும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மழை மற்றும் வறட்சியிலிருந்து சென்னை மாநகரத்தைப் பாதுகாப்பதற்கான இயற்கைக் கொடையாக திகழ்ந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்பட தமிழகம் முழுவதும் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை 2024 ஆம் ஆண்டுக்குள் வரையறுத்து அறிவிக்கை செய்திருக்க வேண்டும். இதற்காக அமைக்கப் பட்ட தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையமும் அதன் கடமைகளை நிறைவேற்றாமல் உறங்கி வழிந்து வந்தது.
புவியியல் காண்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99% முடிவடைந்து விட்டதாக கடந்த ஆண்டு திசம்பர் 3 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் தெரிவித்து, ஓராண்டுக்கு மேலாகி விட்ட நிலையில், இப்போது வரை மீதமுள்ள ஒரு விழுக்காடு பணிகளை தமிழக அரசு முடிக்கவில்லை என்றால், யாருக்கான நலன்களை தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகள் மற்றும் தாக்கப் பகுதிகளை தமிழக அரசு அறிவியல் பூர்வமாக வரையறுத்து அறிவிக்கை செய்திருந்தால், பசுமைத் தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தானாகவே அகற்றப்பட்டிருக்கும். ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதை செய்வதற்கு தயாராக இல்லாத தமிழக அரசின் உயரதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் நலன்களை மட்டும் பாதுகாப்பதற்காக தாக்கப் பகுதியின் பரப்பளவை 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைக்கத் துடிக்கின்றனர்.
புவியியல் காண்
பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் 4 மாதங்களில், அதாவது 11.02.2027&க்குள் அறிவிக்கை செய்யும்படி கடந்த 12.10.2026&ஆம் நாள் உச்சநீதிமன்றம் மீண்டும் ஆணையிட்ட பிறகும் கூட தமிழக அரசு அதன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு ஏற்கனவே உச்சநீதிமன்றமும், இப்போது உயர்நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளவாறு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்வது தான். அதற்கு மாறாக கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினால், சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்யத் தவறியதற்காக அந்த நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
புவியியல் காண்
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றால், தமிழக அரசு அதன் தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கு ஏற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரழிக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி எந்த வகையிலும் அனுமதிக்காது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றால், பாமகவும் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன்.
எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் வரும் ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதை அமைக்கும் பணிகளையும் நிறுத்தி, கட்டுமானங்களை தகர்த்தெரிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
