இந்திய விளையாட்டு அணிகளின் அடையாளமாக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்த நீல நிறத்திற்குப் பதிலாக, வீரர்களின் சீருடையில் காவி நிறம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் பெரும்பாலும் நீல நிற ஜெர்சியுடனேயே களமிறங்கி வருகின்றன. இந்திய ஹாக்கி அணியும் இதுவரை நீல நிற சீருடையையே தனது அடையாளமாகக் கொண்டிருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச எஃப்ஐஎச் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஹாக்கி அணிகளுக்கான புதிய ஜெர்சிகளை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், ஜெர்சியின் நிறம் நீலத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர்களின் சீருடை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலம் வரலாற்றை மீண்டும் எழுத அவர்கள் முயற்சிக்கலாம். ஆனால் நமது இளைய தலைமுறை என்ன நினைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதை சமீபத்தில் நடந்த ஜந்தர் மந்தர் சம்பவம் நிரூபித்துள்ளது. இப்போது ஹாக்கியிலும் இதைச் செய்திருக்கிறார்கள். நாளை ராணுவத்திலும் அதையே செய்யக்கூடும். அவர்களை யாரால் நம்ப முடியும்? அவர்களுக்கு எல்லா இடங்களிலும் காவி வேண்டும்,” என்று விமர்சித்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திலீப் தீர்க்கே விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சர்வதேச ஹாக்கி போட்டிகள் பெரும்பாலும் நீல நிற செயற்கை புல்வெளிகளில் நடைபெறுகின்றன. அந்த மைதானங்களில் நீல நிற ஜெர்சி அணிந்த வீரர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மஞ்சள் மற்றும் காவி நிறங்கள் பரிந்துரைக்கப்பட்டன. மேலும், தேசியக் கொடியின் ஒரு நிறமாகவும், தியாகம் மற்றும் தைரியத்தின் அடையாளமாகவும் காவி நிறம் விளங்குவதால் அந்த நிறம் தேர்வு செய்யப்பட்டது,” என்றார்.
ஏற்கனவே இந்திய ரயில்கள் மற்றும் பீகார் மாநில பள்ளிகளுக்கு காவி நிறம் பூசும் திட்டங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்திய ஹாக்கி அணியின் சீருடையும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
