பெரியபாளையம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் சடலத்தை வயலிலும், கரடுமுரடான வழியில் எடுத்துச் செல்லும் அவலம்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்ன கிளாம்பாக்கம் கிராமத்தில் 78 வயது முதியவர் பெருமாள் என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள்,கிராமமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில் சுடுகாட்டிற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான சாலை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியில் கரடுமுரடான பாதையில் எடுத்துச் செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் சேற்றிலும் சகதியிலும் மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டியுள்ளது எனவும்,1 ஏக்கர் பரப்பளவில் இருந்த மயான நிலத்தை ஒரு சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தற்போது 5 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுடுகாட்டிற்கு செல்ல உரிய முறையில் சாலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
