தமிழக்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வராக பதவி வகிக்கும் விஜய் பேசுவதே இல்லை, பேட்டியும் கொடுப்பதில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவம் போல பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பனையூரில் வந்து சந்திக்க வேண்டும் என விஜய் நினைக்கிறாரா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏ-க்களை விலை பேசி வாங்கி கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக தவெக-வை சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக எம்எல்ஏ-க்களை விலை பேசி வாங்குகிறார். தன்னை சந்திக்க வரும் திரை பிரபலங்களை நேரில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் விஜய். அதே போல ஆட்சிக்கு வந்த பிறகும் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறார் என்று நயினார் விமர்சித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, இன்று வரை முதல்வர் விஜய்க்கு தெரியுமா? நேற்று முன்தினம் மூன்று வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்து, முட்புதரில் வீசியது முதல்வருக்கு தெரியுமா” நெல்லையில் மட்டும் 7 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 207 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 40 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தினசரி நடக்கும் இத்தகைய கொடூரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா? புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க முடியாத அளவிற்கு மோசமான சூழலை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின் தொடக்கத்தில் அதிர்ச்சியிலும், தற்போது முதிர்ச்சியின்றியும் இருக்கிறார் என கடுமையாக சாடி இருக்கிறார்.
