Skip to content
Home » வேலைவாய்ப்பை உருவாக்கி தாங்க… திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்… ‘மிஸ் கூவாகம்’ ஷாம்ஸீ கருத்து!

வேலைவாய்ப்பை உருவாக்கி தாங்க… திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்… ‘மிஸ் கூவாகம்’ ஷாம்ஸீ கருத்து!

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் இரவான் கோயில் அமைந்துள்ளது. கூத்தாண்டவர் கோயில் என்று அழைக்கப்படும் இங்கு, சித்திரை திருவிழா ஏப்ரல் 9-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மிஸ் திருநங்கை 2024 மற்றும் மிஸ் கூவாகம் 2024 என்ற தலைப்பில் அழகிப் போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிஸ் கூவாகம் 2024 அழகிப்போட்டி
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வருகை தந்திருந்தனர்.

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ’மிஸ் கூவாகம்’ ஆக சென்னையைச் சேர்ந்த ஷாம்ஸீ முதலிடத்தையும், புதுவையில் மருத்துவம் பயிலும் வர்ஷா 2-வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகப்பிரியா 3-வது இடத்தையும் பெற்றனர். கூத்தாண்டவர் கோயில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிஸ் கூவாகம் 2024 அழகிப்போட்டி..

முதல் பரிசு பெற்ற ஷாம்ஸீ செய்தியாளர்களிடம் பேசும்போது, ”என்னை அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக ஊக்கப்படுத்திய எனது அம்மா மற்றும் ஒப்பனை கலைஞருக்கு நன்றி. நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரும். திருநங்கைகளுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள். என் அம்மா காலத்தில் பாலியல் தொழில் அதிக அளவில் நடைபெற்றது. என் காலத்தில் அது பாதியாக குறைந்துள்ளது. இதே என் மகள் காலத்தில் முற்றிலும் குறைய அனைவரும் உதவி புரிய வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!