நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை “ஜனநாயகத்தின் வெற்றி” என வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கூறினார். மேலும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் பிரியங்கா காந்தி கூறியதாவது: பெண்களைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு ஆட்சியில் நீடிக்கத் திட்டமிட்டுள்ளது. “நேற்று நடந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கூட்டாட்சி அமைப்பை மாற்றி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் வெற்றி, நாட்டின் வெற்றி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் வெற்றி.
இது ஒரு சதி என்று நான் நினைக்கிறேன். எப்படியாவது அவர்கள் அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக பெண்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக அதிகாரத்தில் நீடிப்பது எப்படி என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அது நிறைவேற்றப்படாவிட்டால், மற்ற கட்சிகளைப் பெண்களுக்கு எதிரானவை என்று முத்திரை குத்தி, பெண்களின் மீட்பர்களாக மாறிவிடுவார்கள். பெண்களின் மீட்பராக மாறுவது எளிதல்ல என்பது நமக்குத் தெரியும். 2023-ல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
மேலும், இது ஒன்றிய அரசுக்கு ஒரு கறுப்பு நாள். ஏனென்றால், ஒன்றிய பாஜக அரசு முதல் முறையாக அதிர்ச்சியை உணர்ந்திருக்கிறார்கள். இன்று பெண்களின் பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. போராட்டம் வளர்ந்து வருகிறது. பெண்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். அந்த மக்கள் தொடர்பு மற்றும் ஊடக ஆரவாரம் இனி எடுபடாது. நீங்கள் உறுதியான ஒன்றைச் செய்ய விரும்பினால், 2023-ல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வாருங்கள் என அவர் கூறினார்.
