கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத குட்டி யானையை, காட்டில் உள்ள வேறு சில யானைக் கூட்டங்களுடன் சேர்த்து வைப்பதற்காக வனத்துறை எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த குட்டி யானையின் பாதுகாப்பைக் கருதி, அது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிறந்து 3 மாதங்களே ஆன மிகச் சிறிய குட்டி யானை என்பதால், காட்டில் உள்ள பிற யானைக் கூட்டங்கள் அதனைத் தங்கள் கூட்டத்துடன் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டியடித்துள்ளன. இந்த தொடர் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், குட்டி யானைக்கு உணவு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு தேவைப்பட்டது. இதனால் உடனடியாக வனத்துறையினர் குட்டியை மீட்டு பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்குக் கொண்டு வந்தனர். அங்கு அதற்குத் தேவையான சிறப்புப் பராமரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
