Skip to content
Home » தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு..

தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு..

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள் என்கின்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ள அந்த குழுவினர், மாணிக்கம் மஹாலில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளனர். தூத்துக்குடி வடக்கு திமுக மாவட்டம், தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்டம், விருதுநகர் வடக்கு திமுக மாவட்டம், விருதுநகர் தெற்கு திமுக மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்டம், ஆகிய 5 திமுக மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்து கேட்கும் பணி நிறைவுபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்னன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.பி), தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ, சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ஒட்டப்பிரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதற்கட்டமாக தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் நாடாளுமன்றத்தில் தொகுதியில் உள்ள விவசாயிகள்,

ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிரந்தனர்.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. நாளை கன்னியாகுமரியிலும், 7-ம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சாவூரிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும் 11-ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இறுதியில் 21, 22, 23ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை கேட்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்குப் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!