Skip to content
Home » திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு?

திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு?

  • by Senthil

நாடாளுமன்ற  தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இத்தேர்தலில் இரண்டு இடங்களிலும்  பானை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஆரம்பம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து வந்தார். அதே நம்பிக்கையில் தேர்தல் ஆணையத்திடமும் பானை சின்னத்தை மீண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இத்தேர்தலில் பானை சின்னத்தை வழங்கவில்லை. இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்,  தேர்தல் ஆணையம்  தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த தேர்தல்களில் மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சதவீதம் அளவிற்கு கூட ஓட்டு வாங்கவில்லை. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் நிதியாண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் தர முடியாது என்று தெரிவித்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்கியுள்ளது. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல், மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் ஆகிய இரண்டு தேர்தலில்களில் வெற்றி பெற்று அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளோம். எனவே தங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று, மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 28ம் தேதி இந்த வழக்கு பட்டியலில் இடம் பெறவில்லை. . எனவே மீண்டும் திங்கட்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.
ஆனால் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வுஇன்று மாலையுடன் முடிந்து விடும்.  எனவே கோர்ட்டால், விடுதலை சிறுத்தைகளுக்கு பானை சின்னம் வழங்க  எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

ஆனாலும் கடந்த இரு தினங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மிகுந்த நம்பிக்கையுடன் தங்களுக்கு பானை சின்னம் கிடைக்கும் என்று உறுதியாக தெரிவிப்பதோடு, இரண்டு நாட்களாக தேர்தல் பிரசாரங்களில் ரவிக்குமாரை ஆதரித்தும் தனக்கும் பானை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்த நம்பிக்கைக்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னம் கோரி  திருமாவளவன் உள்பட இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் குன்றக்குடி பகுதியைச் சேர்ந்த புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் பூரணக்குமார்  என்பவரும்  பானை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலணையில் பூரணக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே தற்பொழுது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 22 வேட்பாளர்களில் பானை சின்னம் கேட்டுள்ள ஒரே வேட்பாளர் தொல்.திருமாவளவன் தான். எனவே அவருக்கு பானை சின்னம் உறுதியாக கிடைக்கும் என்று தொல் திருமாவளவன் நம்பிக்கையுடன் உள்ளார்.

இதுபோல விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை . எனவே விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் கிடைக்கும் என்பதில் திருமாவளவன் நம்பிக்கையுடன் உள்ளார். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக தங்கள் இருவருக்கும் பானை சின்னம் கேட்டு சின்னத்தில் வாக்கு கேட்டு தொல்.திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
இன்று மதியம் 3 மணி வரை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் மூன்று மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் சின்னம் உறுதி செய்யப்படும்.

இதன்படி இன்று மாலை  சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெறும் வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கும் நிகழ்வில் தொல். திருமாவளவனுக்கும் விழுப்புரத்தில் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் இறுதி செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது  என்பதே  தற்போதைய நிலையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!