Skip to content
Home » ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் திருநாவுக்கரசர்,  75 வயது நிரம்பிய மூத்த அரசியல்வாதி. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு  அமோகமாக வெற்றி பெற்றார். இந்த முறையும்திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்பினார்.  ஆனால் இந்த முறை  திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.  எனவே திருநாவுக்கரசருக்கு இங்கு சீட் இல்லை என்றாகி விட்டது.

ஆனாலும்  சீட் பெற்றே தீரவேண்டும் என திருநாவுக்கரசர் டில்லியில் முகாமிட்டு பார்த்தார்.  திருச்சியில் வாய்ப்பு இல்ல ராஜா என்ற நிலை ஏற்பட்டபோதும்,  தேனி அல்லது மயிலாடுதுறை என்று ஏதாவது ஒரு தொகுதியில்  சீட் வாங்கிவிட வேண்டும் என  பகீரத பிரயத்தனம் செய்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.

இன்று வரை திருநாவுக்கரசர் தான் திருச்சி எம்.பியாக இருந்தபோதும் அவர் திருச்சி தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வரவே இல்லை. கடந்த வாரம் திருச்சி வந்த  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம்  இது குறித்து  பத்திரிகையாளர்கள் கேட்டுவிட்டனர்.  அதற்கு அவரும்  ஔிவு மறைவு இல்லாமல், சீட்  கிடைக்காத வருத்தத்தில் திருநாவுக்கரசர் உள்ளார். விரைவில் அவர் பிரசாரத்திற்கு வருவார் என்றார்.

ஆனால் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்து விட்டது. எனவே அவர் முழுவதுமாக பிரசாரத்தை  புறக்கணித்து விட்டார். கடைசி கட்டத்தில் நேற்று  திருச்சியில் திருநாவுக்கரசரின் ஆதரவாளரான ஒரே ஒரு நபர் மட்டும் மதிமுக வேட்பாளருடன்  பிரசாரத்தில் தலையை காட்டி, உள்ளேன் ஐயா என  வருகையை பதிவு செய்துவிட்டு போய்விட்டார்.

அதே நேரத்தில்  ராகுல் பங்கேற்ற  நெல்லை  பிரசார கூட்டத்திலும்,  சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் திருநாவுக்கரசர் பங்கேற்று தான் இன்னும் காங்கிரசில் தான் இருக்கிறேன் என்று காட்டிக்கொண்டார்.   இது குறித்து திருநாவுக்கரசருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

திருநாவுக்கரசர்  தற்போது வருத்தத்தில் இருப்பது உண்மை தான். தற்போது அவரது மகன்  ராமச்சந்திரன் அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார். திருநாவுக்கரசர் இந்த முறை  தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்ததால் அடுத்த முறை  அவரது மகனுக்கு சீட் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். கூட்டணி கட்சியினர் ஒட்டுமொத்தமாக திருநாவுக்கரசர் மேல் அதிருப்தியில் உள்ளனர்.  திருநாவுக்கரசர்  தேர்தல் பணியை புறக்கணித்தது எங்களுக்கும் வருத்தம் தான். பிரசாரத்திற்கு வராத திருநாவுக்கரசர் மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?  என்பது ரிசல்ட்டுக்கு பிறகு தான் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!