Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டன் கணக்கில் மிதக்கும் மீன்கள் – தொழிற்சாலை கழிவுகளே காரணம்

டன் கணக்கில் மிதக்கும் மீன்கள் – தொழிற்சாலை கழிவுகளே காரணம்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகளே காரணம் என்று 8 மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டினர். சென்னை எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் நேற்று பல்வேறு வகையான மீன்கள் டன் கணக்கில் செத்து மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘’தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலப்பது, வடசென்னை அனல் மின்நிலையத்தில் சுடுநீர் ஆற்றில் விடுவது போன்ற காரணங்களால் மீன்கள் செத்துவிடுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், எண்ணூர் முகத்துவார ஆற்று கரையோரம் இறந்து ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே எண்ணூர்குப்பம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படைவீதிகுப்பம், காட்டுக்குப்பம், முகத்துவாரகுப்பம், பெரியகுப்பம் மற்றும் சின்னக்குப்பம் ஆகிய 8 மீனவ கிராம மக்கள் நேற்று மதியம் தாழங்குப்பத்தில் ஆலோசனை நடத்தினர். ‘’முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதக்கும் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினர். மீன்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவேண்டும். சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக நேற்றுமாலை எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மீனவர்கள் கூறும்போது, ‘’எண்ணூர் முகத்துவார பகுதியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கின்றன. தொழிற்சாலைகளின் கழிவுநீரை திறந்துவிடுவதே இதற்கு காரணம்.

இதற்கு முன்பு இப்படி நடக்கும்போதும் அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை பரிசோதனை செய்வார்கள். ஆனால் எந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவு வெளியேற்றப்பட்டது மீன்கள் இறப்புக்கு காரணம் என்ன? என்று வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை. வல்லூர் அனல்மின்நிலையத்தில் இருந்து கழிவுகள், சுடுநீர் ஆற்றில் விடப்படுகிறது. இதன்காரணமாகவும் மீன்கள் செத்து விடுகின்றன. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இதுபோல் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

error: Content is protected !!