Skip to content
Home » ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.

உரிமம் வழங்க அப்போதைய மருந்துக் கட்டுப்பாடு  உதவி இயக்குநர் பார்த்திபனும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியமும் தங்களுக்கு  லஞ்சமாக ரூ.7,000 அன்பரசுவிடம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பரசு அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராம.அம்பிகாபதியிடம்(ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த டிஎஸ்பி  அம்பிகாபதி விசாரணை மேற்கொண்டு அன்பரசுவை லஞ்சப் பணத்துடன் அனுப்பியதில் பார்த்திபனும் சிவபுண்ணியமும் அந்த பணத்தை வழக்கம் போல் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருந்தகத்தில்(தில்லை மெடிக்கல்ஸ்) கொடுத்து விடுமாறும் தாங்கள் பின்னர்  வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்ல அதன் படி அன்பரசு அந்தப் பணத்தை அந்த மருந்தகத்தின் விற்பனையாளர் சேகரிடம் கொடுத்தார். அப்போது தன் குழுவினருடன் துணைக் கண்காணிப்பாளர் அம்பிகாபதி சென்று பார்த்திபன்,சிவபுண்ணியம் மற்றும் சேகர் ஆகியோரைக் கைது செய்தார்.இந்த சம்பவம் 19.5.2008 அன்று நடந்தது.

இவ்வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. தற்போதைய திருச்சி  விஜிலென்ஸ்  துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விசாரணை முடிந்து இவ்வழக்கில் இன்று (6.7.2023) தீர்ப்பளிக்கப்பட்டது. உதவி இயக்குநர் பார்த்திபனுக்கு 4  ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும், சிவபுண்ணியத்திற்கு 4   ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.20,000 அபராதமும், சேகருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கிற்கு முன்னதாக உதவி இயக்குநராக பார்த்திபன் கோவையில் பணியாற்றிய போது ஊழல் வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப் பட்டு கோவை நீதி மன்றத்தால் விடுவிக்கப் பட்டார் என்பதும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியம் முன்பு சிவகங்கையில் பணியாற்றியபோது அவர் மீது ஊழல் புகார் காரணமாக விசாரணை செய்யப் பட்டு அவர் மீது தீர்ப்பாயத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!