Skip to content
Home » சந்திராயன்- 3, திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…….திருச்சி என்ஐடி மாணவர்

சந்திராயன்- 3, திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…….திருச்சி என்ஐடி மாணவர்

உலகின் 4வது நாடாக  நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் சாதனையில் இந்தியா இறங்கி உள்ளது. இதில் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது. ஆம். இன்று சந்திராயன்-3 விண்கலம்,ஸ்ரீ ஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து மதியம் 2.35 மணிக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 3,900 கிலோ எடை கொண்ட ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
‘சந்திரயான்-3’ விண்கல திட்ட இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது தந்தை பழனிவேல் திருச்சி ரயில்வே கோட்டத்தில் தொழிற்சங்க தலைவராக பணிபுரிந்தவர். சாதாரண ரயில்வே ஊழியரின் மகனான வீரமுத்துவேல் (41), இஸ்ரோ விஞ்ஞானியாகி, ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநராக உயர்ந்திருப்பதற்கு திருச்சி ரயில்வே ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ரயில்வே ஊழியராக, திருச்சி கோட்டத்தில் தொழிற்சங்க தலைவராக பணிபுரிந்தவர் பழனிவேல். இவரது 2வது மகன் வீரமுத்துவேல். ‘சந்திரயான்-3’ திட்டம் வீரமுத்துவேலின் சிந்தனையில் உருவானதுதான். இவரது திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியதால், ‘சந்திரயான்-3’ன் தலைவராகவும், நிலவு பயணத்தின் திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

விழுப்புரம் ரயில்வே பள்ளியில் வீரமுத்துவேல் படித்து, பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவாறு தாம்பரம் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார். முதுநிலை படிப்பை திருச்சி என்ஐடியில் முடித்து பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். பணியில் இருந்து கொண்டே ஆராய்ச்சி படிப்பை, சென்னை ஐஐடியில் முடித்த வீரமுத்துவேல் ‘சந்திரயான்-2’ திட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், சிவதாணுபிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா ஆகியோர் வரிசையில் வீரமுத்துவேலும் தற்போது இடம்பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  இந்த ஆராய்ச்சி திட்டம் வெற்றி அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!