திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன் பொருட்களை நிரப்பி போக்குவரத்திற்க இடையூறு ஏற்படுத்துவதாக மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புகழேந்தி ,கண்ணன், செல்வம், திவாகர், ராஜாசுந்தரவடிவேல், மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை லாரிகளில் ஏற்றினர். மேலப்புதூரில் இருந்து வேர்ஹவுசிங், மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் சந்திப்பு வரை இன்று ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிட்டு பணிகளை தொடங்கினர்.
பிரபாத் ரவுண்டானா அருகே ஆக்கிரமித்திருந்த பல டீக்கடைகள், பெட்டிகளை அகற்றப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பலமுறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது என அதிகாரிகள் விளக்கம் அளித்தும் வியாபாரிகள் கேட்காமல் அதிகாரிகளை பணிகள் செய்ய விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக பஸ் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காந்தி மார்க்கெட் போலீசார் வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி 15 நிமிடம் தடைபட்டது. போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.