Skip to content
Home » டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Senthil

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு திருமணம் ஆனது. இதையடுத்து மெர்லின், சாமுவேலுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதை தாங்கமுடியாத சாமுவேல், ஏற்கெனவே எடுத்திருந்த மெர்லின் போட்டோவை அனுப்பி  தன்னுடன் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி மெர்லின், கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரில் சாமுவேலை போலீசார் நேற்று மாலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது சாமுவேலுக்கு ஆதரவாக சென்னை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நரேஷ் என்பவர் கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசன் வந்து, நாங்கள் சாமுவேலை கோர்ட்டில் சரண் அடைய வைக்கிறோம் என்று கூறினாராம். அப்போது போலீசாருக்கும் நரேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நரேஷ் திருச்சி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் விச்சு என்பரை போனில் அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விச்சு மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். போலீஸ் ஸ்டேசனில் கூட்டம் கூடுவதை கண்ட கண்டோன்மென்ட் மகளிர் போலீசார் ”ஓப்பன் மைக்கில்” காவல் நிலைய பாதுகாப்புக்கு, போலீசாரை அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் போலீஸ் ஸ்டேசனிற்கு இரவு வந்தனர். அப்போது போலீஸ் ஸ்டேசன் முன்பு நின்றிருந்த விச்சுவுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனே காங்., கட்சியினர் போலீசாரைக் கண்டித்து கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் ஸ்டேசன் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காங்., கட்சியினர் தொடர்ந்து போலீஸ் ஸ்டேசனிற்கு வந்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் காங்., கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை செய்தனர். இச்சம்பவத்தால் போலீஸ் ஸ்டேசனில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!