பிரபல ரவுடி வெள்ளைக்காளி நடமாட்டம்? 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை….
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்ற காளிமுத்து, திருச்சி நவல்பட்டு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவெறும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) இன்பா, தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையிலிருந்து சமீபத்தில் பிணையில் (ஜாமீனில்) வெளிவந்த ரவுடி வெள்ளைக்காளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் களத்தில் இறங்கினர்.
மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளி (என்ற) காளிமுத்து தமிழக காவல்துறையால் உற்று நோக்கப்படும் ஒரு பிரபல ரவுடி.
இவர் மீது மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் தனது கூட்டாளிகள் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இவர், சமீபத்தில் சென்னை புழல் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தார்.
இந்த சூழலில்
காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை குண்டூர் பர்மா காலனி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.
அங்குள்ள வெள்ளைக்காளியின் உறவினர்களின் வீடுகள், கடைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த பரபரப்பான சோதனையின் முடிவில், வெள்ளைக்காளி அங்கு வந்ததற்கான எந்தவித முகாந்திரமும் ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க நவல்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
