Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்வெட்டு 

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்வெட்டு 

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்தடையை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக குற்றச்சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அமுதா நகர், வஉசி நகர் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அலுவலக பணிக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தொடர் மழையால் திடீரென இரவு 11 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதற்கு பிறகு மின்சாரம் வரவே இல்லை. நேற்று காலை மற்றும் இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக இரவில் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

நேற்றிரவும் மின்தடை நீடித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்றிரவு எண்ணூர் துறைமுகம்-அதானி துறைமுகங்களுக்கு செல்லும் சாலையில் திடீரென திரண்டனர். பின்னர், அவ்வழியாக வந்த கனரக வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘எங்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருமே கூலி தொழிலாளர்கள். தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கையில், 24 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இந்த மின்தடையால் இரவில் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகிறோம்.

குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமையல்கூட செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் அதிகளவில் இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரியான பதில் அளிப்பதில்லை. அலட்சியமாக பதிலளிக்கிறார்கள். சில நேரங்களில் போனை எடுத்து வைத்து விடுகிறார்கள். இந்த மின்தடை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து, ‘சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதற்கு பிறகு நள்ளிரவில் மின்தடை சரி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் துறைமுக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!