Skip to content
Home » ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Senthil

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும் நிதி அமைச்சர் பங்கேற்றார்.  இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  சரியாக காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அடுத்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

கொரோனா காலத்தில்  28 மாதம் மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.2 லட்சம் கோடி மத்திய அரசு செலவு செய்துள்ளது.  கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்து  5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.  102 கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இருமடங்காக உயர்ந்து உள்ளது.  சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  சுற்றுலாவை ேமேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

உலகளவில் ஏற்றுமதியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.  உலக அளவில்  அதிகமாக  சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.  சிறு தானியங்கள்  ஆராய்ச்சிக்காக ஐதராபாத்தில் தனி நிறுவனம் அமைக்கப்படும்.  இதன் மூலம் இந்தியா சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றப்படும்.

பால் கூட்டுறவு சங்கம், வேளாண் சங்கங்கள் இல்லாத இடங்களில் புதிதாக உருவாக்கப்படும்.

தற்போதுள்ள 157 மருத்துவ கல்லூரிகள் அருகில் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவப்படும்.  மீன்பிடித்துறை, மீனவர்கள் நலனுக்கு ரூ.6ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். தேசிய அளவில் இணைய நூலகம் ஏற்படுத்தப்படும்.  குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும்.

வேளாண்மை,கால்நடைபராமரிப்பு ,மீன் வளம், பால்வளத்துறைகளுக்கு கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும். சேமிப்பு கிடங்குகள் பரவலாக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

அடுத்த   சில ஆண்டுகளில் பழங்குடியின மாதிரி  பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.   இவர்கள் மலைவாழ்  மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.  பழங்குடி சமூகத்தை மேம்படுத்த 15ஆயிரம் கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கர்நாடகத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5300 கோடி நிதி ஒதுக்கப்படும். (கர்நாடகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது)

2047க்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்ககப்படும். மூலதன செலவினங்களுக்காகன முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். சாலை பணிகளுக்காக ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.1ஆயிரம் கோடியில்உருவாக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவிற்காக 3 மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும்.அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.  மாநிலங்களுக்கு  50 ஆண்டுகள்  வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம்  மேலும் ஓராண்டு நீடிக்கப்படும். பொறிறியல் துறையில் 5ஜி தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

42 மத்திய சட்டங்களை மாற்றி அமைக்க  ஜன் விஸ்வாஸ் மசோதா கொண்டு வரப்படும்.  டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.  1  கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற ஊக்குவிக்கப்படுவார்கள்.  லடாக்கில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.20,70 0 கோடி ஒதுக்கீடு.இயற்கை உரங்களை ஊக்குவிக்க பிஎம் பிரனாம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை   புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சகணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்.  பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் உருவாக்கப்படும்.

சுற்றுலா மேம்பாட்டுக்கு 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு  மேம்படுத்தப்படும்.  சுற்றுலாவை மேம்படுத்தத யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்.

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு ரூ9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.  வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்.பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.  நிதி பற்றாக்குறை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மொத்த  ஜிடிபியில் 4.5 % ஆக கொண்டு வரப்படும்.2023-24ல் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மொபைல் போன், கேமரா, தொலைக்காட்சி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

6.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்..  தங்கம் ,வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்படுகிறது.ஸ்டார்ட் அப் துறைகளுக்கும் வரி சலுகைகள் அளிக்கப்படுகிறது.புகையிலை பொருட்களளுக்னா வரி 16 % உயர்த்தப்படுகிறது.

புதிய வருமான வரி முறையில், வருமான வரி  விலக்கு உச்சவரம்புரூ 5 லட்சத்தில் இருந்து  ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.  பழைய  வரி முறையில் உள்ளவர்களுக்கு  வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக  அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பட்ஜெட்டில் கூறினார்.  சுமார் 90 நிமிடங்கள் பட்ஜெட் உரை படித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!