Skip to content
Home » அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

  • by Senthil

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வியை தழுவினர். அதனை தொடர்ந்து டிரம்ப் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் உள்ள தனது கடற்கரை வீட்டில் குடியேறினார்.  அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் டிரம்ப் அதை செய்யாமல் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டிரம்ப் இதை திட்டவட்டமாக மறுத்தபோதும் அமெரிக்க நீதித்துறை இது குறித்து விசாரணையை தொடங்கியது.  அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்பின் கடற்கரை வீட்டில் மத்திய புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது டிரம்ப் வீட்டின் குளியலறையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் டிரம்ப், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஜனாதிபதி ஜோ பைடன் அரசை சாடினார்.  இந்த சூழலில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள மியாமி நகர கோர்ட்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றார் என்பது உள்பட டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில் நேற்று டிரம்ப் தனது 77-வது பிறந்த நாளில், ரகசிய ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக மியாமி நகர கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான டிரம்பின் முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் கோர்ட்டில் ஆஜரானார். அவர்கள் இருவரையும் மியாமி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களது கை ரேகைகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டன.

அதே சமயம் டிரம்ப் வகித்த உயர் பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு கை விலங்கு பூட்டப்படவில்லை.  தொடர்ந்து நடந்த விசாரணையின் போது டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்து தான் குற்றமற்றவர் என வாதிட்டார். இதையடுத்து அரசு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, டிரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ஜாமீன் வழங்கி விடுவித்தார்.  இதையடுத்து, டிரம்ப் தனது முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவிடம் இந்த வழக்கு குறித்து நேடியாக ஆலோசனை நடத்த தடை விதித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!