Skip to content
Home » அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி‌.வி. தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ,  அவர் தலைக்கு விலை பேசுவது  காட்டுமிராண்டித்தனம். சனாதன தர்மம் குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாக பேசியுள்ளார். சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எடப்பாடி பழனிச்சாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. செலவைக் குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறினாலும், ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாகும்.

மக்களிடம் கருத்து கேட்ட பிறகு செய்ய வேண்டும். என் மீதான அமலாக்கத் துறை வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நடந்து கொள்வேன். என் மீது தவறு இல்லை என்பதால் அபராதம் கட்டக்கூடாது என போராடி வருகிறேன். நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்வேன்.

கடைமடைப் பகுதியில் காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு கர்நாடகத்திடமிருந்து தமிழக அரசு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது அ.ம.மு.க துணைப் பொதுச் செயலர் ரெங்கசாமி , தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!