Skip to content
Home » மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கில் தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசும் போது தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக் கண்ணு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எளிமையான அவர் அமைச்சரான பின்னும் எளிமை மாறவில்லை. அவர் அரசு வேலையை உதறி விட்டு எம்ஜிஆர் மேல் உள்ள பற்றின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். மூன்று முறை பாபநாசம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவில் தமிழக வேளாண் துறை அமைச்சராக அஇஅதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றினார். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நான் முதல்வராக பணியாற்றிய போது தனக்கென்று எதையும் கேட்டதில்லை. எந்த சிபாரிசுக்காகவும் வந்ததில்லை.

கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி. சீனிவாசன், அன்பழகன், மணியன், விஜயபாஸ்கர், தாமரை ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உம்பளாப் பாடி செல்வராஜ், சிவகுமார், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் உட்பட கலந்துக் கொண்டனர். நிறைவாக தமிழக முன்னாள் வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மகனும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளருமான சண்முக பிரபு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!