Skip to content
Home » வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

  • by Senthil

தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் எப்போது வாக்களிக்க வருவார், எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஏனெனில், கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து விஜய் வாக்களித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாகத்தான் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குச்சாவடிக்குள் செல்வதற்குள் ரசிகர்கள் சூழ்ந்து நெருக்கியதால் திணறிப்போனார் விஜய். ஒருவழியாக போலீஸார் அவரை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர் வாக்களித்தார்.

இந்நிலையில், தான் வாக்களித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு,’நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார் விஜய்.

நடிகர் விஜய் வாக்களித்துவிட்டு திரும்பும் வரையில், வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் ஏற்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் நடந்துகொண்டதாக கூறி சென்னை காவல்துறையில் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். வாக்கு ச்சாவடிக்கு ஏராளமானோருடன் விஜய் வந்தது விதிமீறிய செயல் என செல்வம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!