Skip to content
Home » திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி  விழா இன்று  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.  விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்த இரு சந்நதிகளிலும்  இன்ற காலை சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை 8 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜபூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, காலை 9 மணியளவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், மெகா கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது.

இதையொட்டி கோவில் மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 30 கிலோ நெய், ஏலக்காய், ஜாதிக்காய், எள், தேங்காய்ப்பூ உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி  இன்று அதிகாலையிலேயே  கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

இதில்  75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும்,  75 கிலோ கொழுக்கட்டை  உச்சி பிள்ளையாருக்கும் நைவேத்தியம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு  தொற்று நோய் எதுவும் இல்லாத நிலையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள்  உச்சிப்பிள்ளையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர். பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலை உச்சியில் உள்ள படிக்கட்டுகளில் பல்வேறு வகையான கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும் மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். இதுபோல திருச்சி மாநகரில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் இன்று காலை முதல் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.  விடுமுறை தினம் என்பதால்  கோயில்களில்பக்தர்கள் கூட்டமும்  அதிக அளவில்   காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!