சென்னை: பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆராய்ச்சி மையம் விஐடி சென்னையில் தொடங் கப்பட்டுள்ளது. மையத்தில் பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், ஐந்து கல் போன்ற விளையாட்டுகளின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல், பிரச்னைகளை தீர்க்கும் திறன், மன அமைதி போன்ற அம்சங்களில் ஏற்படும் மாற்றங்கள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட உள்ளன.
மையம் மத்தியக்கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge Systems) பிரிவின் கீழ் செயல் படுத்தப்படுகிறது. இந்த மையத்தை திறந்து வைத்து விஐடி துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், “பாரம்பரிய தமிழர் விளையாட்டுகள் பல தலைமுறைகளாக குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித் துள்ளன. குறிப்பாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல், திட்டமிடல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் சமூக உறவை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தன. ஆனால் இவை இன்றைய காலத்தில் மெதுவாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுப்பதற்கு இந்த மையத்தின் செயல்பாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.
திருமந்திரத்தில் உள்ள மூச்சுப்பயிற்சி, உணர்வுகள் மற்றும் மனம் உடல் இடையேயான தொடர்பு பற்றிய கருத்துகளும் இந்த ஆய்வில் இடம்பெறுகின்றன. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் திருக்குறள் குறட்பாக்களும் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பழந்தமிழ் மரபுகளையும், பண்பாடுசார் பழக்கவழக்கங்களையும் அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்வது மற்றும் மாணவ-மாணவியரின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்துவது போன்றவை மையத்தின் குறிக்கோள்களாகும். வரும் காலங்களில் இதுபோன்று இன்னும் பல தமிழர் விளையாட்டுகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுளோம்,” என மையத்தின் முதன்மை ஆய்வாளர் கணேஷ், இணை ஆய்வாளர் விஜயபானு ஆகியோர் தெரிவித்தனர்.
