Skip to content
Home » அனைத்து விவிபாட் சீட்டுக்களும் எண்ணப்படுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனைத்து விவிபாட் சீட்டுக்களும் எண்ணப்படுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களுடன் விவிபாட் எந்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தான் அளிக்கும் வாக்கு யாருக்கு செல்கிறது என்பதை சரிபார்க்க விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

வாக்காளர் வாக்கு எந்திரத்தில் வாக்களித்தப்பின் அதன் அருகே பொருத்தப்பட்டுள்ள விவிபாட் எந்திரத்தில் வாக்காளர் யாருக்கு (வேட்பாளர் பெயர், சின்னம்) வாக்களித்தார் என்பதை உறுதிசெய்யும்வகையில் சீட்டு உருவாகும். அந்த சீட்டை வாக்காளர் பார்க்க முடியும். வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக எத்தனை வாக்குகள் அளித்துள்ளனர் என்ற விவரம் விவிபாடிலும் சீட்டுகளாக சேகரிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய விவிபாட்டுகளில் சேகரிக்கப்பட்டுள்ள சீட்டுகளும் எண்ணப்படுகின்றன.

இந்த நடைமுறை வாக்கு எண்ணிக்கையை மேலும் துல்லியமாக்குகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது சந்தேகங்கள் ஏற்படுவதை தவிர்க்க விவிபாட் சீட்டு திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியுள்ளது. ஆனால், தேர்தலின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளும் எண்ணப்படுவதில்லை. மாறாக ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களில் பதிவாகியுள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதுபோல் விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அருண் குமார் அகர்வால் என்ற சமூகநல ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களின் சீட்டுகள் மட்டும் எண்ணப்படுகின்றன.

மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 24 லட்சம் விவிபாட் எந்திரங்கள் கொள்முதல் செய்துள்ளன. ஆனால், தேர்தலின்போது 20 ஆயிரம் விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதற்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதுபோல் அனைத்து விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணுவது குறித்து பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!