சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடிக்காகத்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்தது ஏன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி என்ன ஆனது? பயிர்க்கடனை எப்போது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்க வேண்டும்
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? மேகதாது விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் டெல்லி சென்று வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தியிருந்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள்? மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டுவருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது.
முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் பேட்டி அளிக்கிறார். இன்னொரு அமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறுகிறார். கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் சொன்னதை இரண்டு அமைச்சர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். முதல்வர் விஜய் கர்நாடக செல்வதாக இருந்தாரா? மேகதாது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. முதலமைச்சர் பேச்சைத்தான் இங்கு கூறுகிறேன், அவைக்குறிப்பில் இருந்து நீக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள் என்பதுதான் எனது சாதாரண கேள்வி என்று கூறினார்.
