தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் (85), நேற்று (மே 17, 2026) சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடையாறில் உள்ள திரு-வி-க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, நடைபயிற்சி செல்வதாகக் கூறிச் சென்ற அவர், திடீரென அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில காலமாக தனது குடும்பத்துடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்த கே. ராஜன் திடீரென விபரீத முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அடையாறு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரையுலகின் சவால்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் குறித்து மேடைகளில் எப்போதும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பேசிவந்த கே. ராஜனின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
