குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் ராஜன் (51), தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு லலிதா, குளச்சல் கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலா மற்றும் அவரது கணவர் புஷ்பநாதன் (58) வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். ராஜன் தனது மனைவியை அழைக்க வந்தபோது, லலிதா வர மறுத்ததோடு மேரிகலாவும் தங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால், மனைவி தன்னுடன் வராததற்கு அவர்கள்தான் காரணம் என ராஜன் வன்மம் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் புஷ்பநாதன் மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அங்கு சென்ற ராஜன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ராஜன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பநாதனின் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். புஷ்பநாதன் அலறியபடி தெருவுக்கு ஓடியும் விடாமல் துரத்திக் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே புஷ்பநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை வழக்கு குறித்துப் பதிந்த குளச்சல் போலீசார், தப்பியோடிய ராஜனை அதிரடியாகக் கைது செய்தனர்.
