மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசுகையில், “எல்லோருக்கும் பாதுகாப்பான ஒரு சூழல் இங்கு இருக்கிறதா? பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா? நல்ல சாலை வசதி இருக்கிறதா? குடிநீர் இருக்கிறதா? விவசாயம் இருக்கிறதா? வேலைவாய்ப்பு இருக்கிறதா? எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள், எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்புகூட இதே மதுராந்தகத்தில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் இங்கு வந்து வாக்கு கேட்கிறார். ஆனால், இதுகுறித்து ஏன் எதுவும் பேசவில்லை? முதலமைச்சரே, உங்களிடம் நான் கேட்கிறேன்; ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறீர்கள்?
இன்று ஒட்டுமொத்த பெண்களுக்கும் நான்தான் பாதுகாவலர் என்று கூறுகிறீர்கள். ‘என் அக்கா, தம்பி, தங்கச்சி’ என்று பெண்களை அழைக்கிறீர்கள். ஆனால், இந்த மதுராந்தகத்திற்கு நீங்கள் வந்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை?
உண்மையிலேயே நீங்கள் பெண்களின் பாதுகாவலர் என்றால், இதுபோன்ற சம்பவங்களுக்கு முன்னின்று முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ஏன் இதைப் பற்றி முதலமைச்சர் பேசவில்லை?” என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, சாலை வசதி, குடிநீர், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
