13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா , இந்தியா மோதின. 100 கோடி இந்திய கிரிக்கெட் ரசிர்களும் இந்திய வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். இந்திய தலைவர்கள் அனைவரும் இந்தியா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. அந்த அணி உலக கோப்பையை வெல்வது இது 6 வது முறை. பல நாடுகள் இன்னும் உலக கோப்பையை வெல்ல முடியாத நிலையில் அந்த கோப்பைக்காக ஏங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியா இப்போது 6வது முறையாக கோப்பையை வென்றதால், அந்த கோப்பைக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போய்விட்டது. எனவே தான் ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வென்ற கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் தனது 2 கால்களையும் வைத்து போஸ் கொடுத்துள்ளார்.
140 கோடி மக்களின் தலைவரான இந்திய பிரதமர் மோடி கைகளால் வாங்கிச்சென்ற மதிப்புமதிக்க அந்த வெற்றிக் கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது இரண்டு கால்களையும் வைத்து அவமரியாதையாக போஸ் கொடுக்கும் இந்த படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி அந்த கோப்பைக்கு கொடுத்த மரியாதையை கடந்த சில மாதங்களுக்கு முன் நாம் பார்த்தோம். கோப்பையை முக்கிய பிரமுகர்களிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். பின்னர் திருப்பதி உள்பட பல தெய்வசன்னிதிகளில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஆனால் ஐபிஎல் போட்டியை விட மிகப்பெரிய போட்டியான உலக கோப்பை போட்டியில் வென்ற கோப்பை அது கிடைத்த சில மணி நேரத்தில் ஒரு வீரரின் காலடிக்கு சென்று விட்ட அவலத்தை பார்த்த இந்திய ரசிர்கள் இதற்கும் சேர்த்து கண்ணீர் விட்டனர்.
பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே, 6 முறை கோப்பை கிடைத்ததால் இந்த கோப்பையும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புளித்து போய்விட்டதோ, உலக கோப்பைக்கு என்று ஒரு மரியாதை இல்லையா, அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்று அதனை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும், எங்கள் பிரதமரிடம் பெற்ற கோப்பையை இப்படி காலுக்கு ஊன்று கோலாக வைத்திருப்பதை ஏற்க முடியாது. இதற்கான நெறிமுறைகளை ஐசிசி வகுக்க வேண்டாமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்புடன் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.