சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா கண்டித்து வந்தார். ஆனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மது அருந்துவதாக சபரிநாதன் தெரிவித்தார். இதனால் அவரது மனைவி கோபித்துகொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், சங்கீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சபரிநாதன் அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த வருமாறு பேசியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த சபரிநாதன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் மகாராணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது. சபரிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
