அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அரசு வாகனத்தில் வந்துள்ளார்; அவருக்கு பின்னால் எஸ்கார்ட் வண்டியும்; அதற்கு பின்னால் அவரது சொந்த வாகனமும் வந்துள்ளது. வாகனங்கள் காட்டாங்குளத்தூர் சந்திப்புப் பகுதியை கடந்தபோது, அமைச்சருக்குப் பின்னால் வந்த அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா (Maruti Ertiga) கார், எதிர்பாராதவிதமாக ஹோண்டா டியோ (Honda Dio) இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இறையன்பு என்ற 26 வயது இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கார் மோதி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
